அர்ஜுனன் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்பட்ட பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. இதுவரை 200 படங்களில் பணியாற்றி, 500க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ள அர்ஜுனன்தான், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதன்முதலில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கி அவர் இசையமைப்பாளராக மாற பிள்ளையார் சுழி போட்டவர் ஆவார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...''ஒரு முறை கனிவு காட்டினாலும், அது வாழ்நாள் வரை நிலைக்கும். எனது சிறுவயதில் எனக்கு நீங்கள் தந்த ஊக்கத்தையும், செலுத்திய அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். உங்களது முடிவில்லா மரபுக்கு உங்களின் எண்ணற்ற பாடல்கள் அத்தாட்சி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் எம்.கே.அர்ஜுனன் மாஸ்டர். அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் அனுதாபங்கள்'' என பதிவிட்டுள்ளார்.