தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன் 2', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் 'பொன்னியின் செல்வன் 2' வரும் 28 ஆம் தேதி (28.04.2023) திரைக்கு வரவுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், 'பொன்னியின் செல்வன் 2' பட பணிகளால் நீடா அம்பானியின் நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீடா அம்பானி, இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில், 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' என்ற பெயரில் 4 அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தை தொடங்கியுள்ளார்.
இதில் 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், ஸ்டுடியோ, போன்றவை இடம்பெற்றுள்ளன. மும்பையில் அமைந்துள்ள இந்த கட்டடத்தின் தொடக்க விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், சல்மான் கான், அமீர்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷ்ரத்தா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொள்ள முடியாதது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான், "பொன்னியின் செல்வன் 2 படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகளை கவனித்து வருவதால் இந்த நிகழ்ச்சியை மிஸ் செய்துவிட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.