இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’, பிரபு தேவா - மனோஜின் ‘மூன் வாக்’ மற்றும் எஸ்.ஜே.இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இதனிடையே தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் செயற்கை நுண்ணறிவு(ஏ ஐ) மற்றும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ மூலம் ‘லீ மஸ்க்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த 2022ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைபப்ட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது மாதவன் பார்த்து படத்தை பாராட்டி இருந்தார். இதையடுத்து ரஜினி, விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் படத்தை பார்த்து ஏ.ஆர் ரஹ்மானை பாராட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் ‘சீக்ரெட் மவுண்டெய்ன்’ என்ற தலைப்பில் தனது யூட்யூபில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், லூனா என்ற இளம் பெண், சீக்ரெட் மவுண்டனின் உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பல்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த பல்வேறு இசைக் கதாபாத்திரங்களை அவர் சந்திப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த புராஜெக்ட் தொடர்பாக தற்போது ‘ஓபன் ஏ ஐ’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “சாம் ஆல்ட்மேனை அவரது அலுவலகத்தில் சந்தித்தது மகிழ்ச்சி. எங்கள் ஏ ஐ இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டெய்னைப் பற்றி பேசினோம். மேலும் ஏ ஐ கருவிகளை பயன்படுத்த இந்திய மக்களின் மனதை மேம்படுத்தவும் அதனால் எதிர்வரும் சவால்களை தாண்டி முன்னோக்கி செல்வது குறித்தும் விவாதித்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.