இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் இன்று சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இசைக் கச்சேரியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சென்னை பனையூரில் இசைக் கச்சேரி நடைபெற இருந்த அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான், "எனது அன்பான நண்பர்களே... மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த பதிவின் கீழ், ஒரு ரசிகர் மதுரையிலிருந்து வந்ததாகவும் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் வருத்தப்பட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதிலளித்த ஏ.ஆர் ரஹ்மான், "நமது அரசாங்கத்தின் உதவியுடன் இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச அனுபவங்களுக்கான அடுத்த கட்ட உள்கட்டமைப்பு வசதியை சென்னைக்கு உருவாக்குவோம் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.