அமெரிக்காவில் கடந்த வாரத்தில் ‘கோல்ட்பிளே’ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரானும், அதே நிறுவனத்தில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் கிறிஸ்டின் கேபாட்டும் கட்டியணைத்த படி நிகழ்ச்சியை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை ‘கிஸ் கேம்’ படம்பிடித்து பெரிய திரையில் காட்டியது. 

கிஸ் கேம் என்பது ஒரு நிகழ்ச்சியின் போது நெருக்கமாக இருக்கும் தம்பதிகளை பெரிய திரையில் காட்டுவதாகும். அவ்வாறு காட்டும் பட்சத்தில் அந்த தம்பதிகள் கிஸ் கொடுக்க வேண்டும் என ஆடிட்டோரியத்தில் இருக்கும் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மேலும் அவர்கள் அப்படி செய்ய வேண்டும் என்பதற்காக ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்துவார்கள். இந்த நடவடிக்கை கலகலப்பான ஒன்றாக அங்கு பார்க்கப்படுகிறது.    

284

அந்த வகையில் கிஸ் கேம் மூலம் பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட சி.இ.ஒ. ஆண்டி பைரானும் கிறிஸ்டின் கேபாட்டும் கிஸ் கொடுக்காமல் தங்களது முகத்தை மறைத்து கொண்டு கீழே குனிந்து சென்றனர். உடனே இசைக்குழுவின் பாடகர் கிரிஸ் மார்டின், “அவர்கள் காதலில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருக்கலாம்” என மைக்கில் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவ இருவருக்கும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் நடந்திருக்கும் நிலையில் தற்போது திருமணத்தை மீறிய உறவில் இருந்துவருவதாக பரவலாக பேசப்பட்டது. இந்த விவகாரம் ஆண்டி பைரானை மன்னிப்பு கேட்கும் அளவிற்கும் தனது பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கும் கொண்டு சென்றது. 

Advertisment

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் ‘வொண்டர்மென்ட் டூர்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது கேமராமேன்,திடீரென ரசிகர்களை பெரிய திரையில் காட்டினார். குறிப்பிட்டுக் காட்டும் படியான ஒரு தம்பதியை அல்ல. பொதுவாக ரசிகர்களை காட்டினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், முந்தைய கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியின் கிஸ் கேம் சர்ச்சையை கிண்டலடிக்கும் வகையில், “நான் உங்களை சிக்கலில் மாட்டிவிட மாட்டேன். கவலைப்படாதீர்கள்” என நகைச்சுவையாகப் பேசினார். இதை கேட்ட ரசிகர்கள் இன்னும் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்து கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். படத்தை பொறுத்தவரையில், தமிழில் ஜீனி, தெலுங்கில் பெடி, இந்தியில் ராமயணா உள்ளிட்ட இன்னும் ஏகப்பட்ட படங்களை கைவைசம் வைத்துள்ளார்.