Skip to main content

தாய்மொழியை மறவாதீர்கள்; கீரவாணியை மறைமுகமாகச் சொல்கிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

ar rahman indirectly said dont forget mother tongue to keeravaani

 

95வது ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

 

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, மேடையில் படக்குழுவினரின் பெயரைச் சொல்லி பாட்டு பாடியே ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் கார்த்திகி கோன்சால்வ்ஸியும் ஆங்கிலத்தில் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் இரண்டு படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், நேற்று இரவு திடீரென்று தமிழ் குறித்து விவேக்கிடம் விஜயகாந்த் பேசும் ஒரு காட்சியை ஒரு ரசிகர் பதிவிட்டிருந்த நிலையில் அதனை ரீட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில், "தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா..." என்று விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் விஜயகாந்த் பேசும் வசனம் இடம்பெற்றிருந்தது. மேலும் "காமெடி லெஜெண்டை மிஸ் செய்கிறோம். பேரிழப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

விவேக்கை நினைவூட்டும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டிருந்தாலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட அதே நாளில் திடீரென்று தமிழ் குறித்து அந்த வீடியோ பேசுவதால் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு 81வது ஆஸ்கர் விருது விழாவில் கீரவாணி வாங்கிய அதே பிரிவில் ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் படக்குழுவிற்கு நன்றி சொல்லிவிட்டு கடைசியாக தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என அவரது தாய்மொழியான தமிழில் பேசியிருப்பார். ஆனால் தற்போது விருது வென்ற கீரவாணி அவரது தாய் மொழியான தெலுங்கில் எதுவும் பேசவில்லை. இதனால் உயரிய விருதுகள் வென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என மறைமுகமாக ஏ.ஆர். ரஹ்மான் கூறுகிறாரா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.