ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

ar rahman concert issue Order to pay compensation of Rs. 50,000

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏ.சி.டி.சி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தார்கள். இது போக கழிவரை வசதி, பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருந்தது. இது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலும் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சி காணமுடியாமல் போனோர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் மழை பெய்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த அர்ஜூன் என்பவர்,‘ஆகஸ்ட் 12இல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை, ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் போக்குவரத்து நெரிசலால் இசை நிகழ்ச்சியை காணமுடியவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்’ என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனு தாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு செலவாக ரூ.5,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe