ADVERTISEMENT

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி; காவல்துறையினர் அதிரடி

06:41 PM Sep 22, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகப் பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும், குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டார்.

அந்த நிறுவனம் கேளிக்கை வரியைச் செலுத்தாததால் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கானாத்தூர் காவல்துறையினர், ஏசிடிசி நிர்வாக இயக்குநர் ஹேமந்த் மீது 188 மற்றும் 406 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT