
1992ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' படம் மூலம் இந்திய திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் 'இசைபுயல்' ஏ.ஆர். ரஹ்மான். பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் 'ஹிந்தி' மற்றும் 'ஹாலிவுட்' வரை வெற்றிக்கொடி நாட்டினார். 'ஸ்லம் டாக் மில்லியனைர்' என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தற்காக 2 'ஆஸ்கர்' விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் நிலைநாட்டினார். இதுமட்டுமில்லாமல் இசைத்துறை ஜாம்பவான்களுக்கு வழங்கப்படும் 'கிராமி' விருதினை இரண்டு முறையும் மற்றும் 'கோல்டன் குளோப்' விருதினையும் பெற்றுள்ளார். மேலும் பல தேசிய விருதுகளும் மாற்று ஆறு முறை டாக்டர் பட்டமும் பெற்ற இவரின் சாதனைகளை பெருமை படுத்தும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு 'நோட்ஸ் ஆப் எ டிரீம்' என பெயரிடப்பட்டுள்ளது. இவர் விளம்பரப் படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்தது முதல் ஆஸ்கர் விருது பெற்றது வரை, மற்றும் இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.