இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’, பிரபு தேவா - மனோஜின் ‘மூன் வாக்’ மற்றும் எஸ்.ஜே.இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் 'தி வொண்டர்மென்ட் டூர்' என்ற பெயரில் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். கடைசியாக அமெரிக்காவில் நடத்தி முடித்திருந்தார். இதனால் அமெரிக்காவில் இருக்கும் அவர் சமீபத்தில் ‘ஓபன் ஏ ஐ’ நிறுவனத்தின் சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேனை தான் பணியாற்றும் ‘சீக்ரெட் மவுண்டெய்ன்’ புராஜெக்ட் தொடர்பாக சந்தித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸை சந்தித்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த நபரை இப்போது டல்லாஸ் பகுதியில் அவரது இடத்தில் சந்தித்தேன். இந்திய கர்நாடக இசை தொடர்பாக அவர் செய்த ஆராய்ச்சி பணியையும் காதலையும் பார்த்து வியந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இந்திய இசைத்துறையில் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி புகழ் பெற்றவர் கே.ஜே.யேசுதாஸ். குறிப்பாக இவரது தெய்வீக பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். பாடகராக மட்டுமல்லாமல் சில படங்களுக்கு இசையமைத்து நடிக்கவும் செய்திருக்கிறார். இப்போது ஆக்டிவாக பாடிக்கொண்டிருக்கிறார். அவரது வயது 85.