Skip to main content

இந்தியாவில் இருந்து ஏன் அடுத்த ஆப்பிள் வரக்கூடாது? - ஏ.ஆர் ரஹ்மான்

Published on 18/11/2024 | Edited on 18/11/2024
ar rahman about ai and vr tecnology

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதை தாண்டி தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு வெளியான 'அட்கான் சட்கான்' என்ற இந்தி படத்தைத் தயாரித்த ரஹ்மான், பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான '99 சாங்ஸ்' என்ற படத்தைத் தயாரித்து கதையும் எழுதியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து ஏ.ஐ.(Artificial intelligence) மற்றும் வி.ஆர்.(Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘லீ மஸ்க்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். கிட்டதட்ட 40 நிமிடங்களுக்கு குறைவாக ஓடக்கூடியதாக சொல்லப்படும் இந்தப் படத்தை ஆங்கிலத்தில் இயக்கியது மட்டுமல்லாமல் தயாரித்து கதையும் எழுதியுள்ளார். இந்தப் படம் கடந்த 2022ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைபப்ட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது மாதவன் பார்த்து படத்தை பாராட்டி இருந்தார். இதையடுத்து ரஜினி, விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் படத்தை பார்த்து ஏ.ஆர் ரஹ்மானை பாராட்டியிருந்தனர். 

இந்த நிலையில் இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் விருது வாங்கியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.-யில் நடந்த நிகழ்வில் அந்நிறுவனத்தின் இந்தாண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு விருதை வாங்கிய ரஹ்மான், “உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக, நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி. வி.ஆர் தொழில்நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள், 10 நிமிடம் படமா என கேட்டனர். புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர். ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது? நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம். கல்யாண நிகழ்ச்சியை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது” என்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாம் ட்ரைவராக இல்லை. வெறும் பயணிகளாக மட்டும் இருக்கிறோம். இங்க இருக்கிற இளம் தலைமுறையினர் ரொம்ப அறிவார்ந்தவர்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.  

சார்ந்த செய்திகள்