
ஏ.ஆர். ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளனர். அதில், கடந்த 2018ல் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ. 29.50 லட்சம் முன்பணம் பெற்று, திருப்பித் தரவில்லை. மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கான முன் தொகையை திருப்பிக் கேட்டபோது, அதனைத் தரவில்லை. அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனதால் அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிய வேண்டும். இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் மீதும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரஹ்மானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இசைத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தளங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார். அசிகான் - 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கம் ரஹ்மான் மீது எழுப்பியுள்ள குற்றச்சாட்டு என்பது, அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது. அசிகான் அமைப்புடன் ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில் மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள். தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறியிருக்கிறார். மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது.
ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும். ரஹ்மான் மீது சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக ரூ. 10 கோடி தர வேண்டும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.