விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இப்படத்தில் ரூபிணி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘ஆட்டமா தேரோட்டமா’ என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
விஜயகாந்தின் 100வது படமாக வெளியாகியிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டத்தை அடைமொழியாக பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இப்படம் 34 ஆண்டுகள் கழித்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4கே தரத்தில் மறுஉருவாக்கம் செய்து வருகின்ற 22ஆம் தேதி ரீ ரிலிஸாகிறது. விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரீ ரிலீஸை முன்னிட்டு படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் ஏ.ஆர்.முருகதாஸும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியில் இந்த படம் வெளியானபோது கிட்டத்தட்ட பத்து நாட்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் இரண்டு பாடல்கள்தான். அதுவும் ஹீரோவுக்கு கிடையாது. துப்பாக்கி படத்தின் முதல் 20 நிமிட காட்சிகளை கேப்டன் பிரபாகரனை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்துத்தான் எடுத்தேன். பெரும்பாலும் வில்லன் இறந்து விட்ட பிறகு ஒரு படம் முடிந்து விடும். ஆனால் இதில் வில்லன் இறந்த பிறகும் பத்து நிமிடம் படம் ஓடியது. அதை முன்னுதாரணமாக வைத்து தான் ரமணா படத்திலும் ஹீரோ இறந்த பிறகு கொஞ்ச நிமிடங்கள் படம் ஓடும்படி உருவாக்கினேன். கேப்டனை வைத்து படம் இயக்குவது ஒரு கனவாக இருந்தது. என்னுடைய திருமணத்தை அவர் நடத்தி வைத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கில படம் போல அன்றைய காலகட்டத்திலேயே அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டத்தை இயக்குநர் ஆர்கே செல்வமணி கொடுத்திருக்கிறார். அவரது அருகில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதே பெருமை” என்றார்.