
முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திறந்து வைத்திருந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, தன்னுடைய அனுபவங்களை செய்தியாளர்களிடம் சொன்னார். அவருடன் நடிகர் யோகிபாபுவும் கலந்துகொண்டு பார்வையிட்டார். இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது இந்த கண்காட்சியை பார்த்து ரசித்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிக பெரிய தமிழின தலைவனின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார். இது தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும், உலகத்தில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். நாம் எல்லாம் அறிந்திருந்த விஷயத்தை இந்த புகைப்பட கண்காட்சியில் பார்த்தது அவரோடு நாம் பயணித்த ஒரு உணர்வை நமக்கு தருகிறது. அவர் மேல் மிகப்பெரிய மரியாதையும் உண்டாகிறது. இதனை தமிழகத்தில் இருக்கும் அத்தனை பேரும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க வேண்டும்" என்றார்.
பின்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழகம் தமிழ்நாடாக மாறியதற்கு நிறைய போராட்டங்கள் இருக்கிறது. அதற்கு உயிர் நீத்த பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள். அதை நம் முதல்வர் அவ்வளவு எளிதாக யாருக்கும் விட்டு தரமாட்டார். அதனை காணொளியாக சட்ட சபையில் பார்த்தோம். இப்பொழுதும் எப்பொழுதும் தமிழ்நாடு என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்த கண்காட்சியில் இருக்கும் வரலாற்று பதிவுகளை நிச்சயமாக இந்திய அளவில் ஒரு பயோ பிக்காக எடுக்க முடியும். அதற்கான அத்தனை அம்சங்களும் இதில் இருக்கிறது" என்றார்.