Skip to main content

எனக்கு ஹீரோயின் வசுந்தரா என்றார்கள்...அப்படியே தூக்கிவாரிப்போட்டது...ஏன் தெரியுமா..? - அப்புக்குட்டி  

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா இணைந்து நடித்துள்ள படம் 'வாழ்க விவசாயி'. அறிமுக இயக்குனர் பொன்னிமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து அப்புக்குட்டி பேசும்போது...

 

appukutty


 
''எனக்கு 'அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித்தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று  முடிவு செய்து கொண்டேன். இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக 'வாழ்க விவசாயி 'கதை அமைந்திருக்கிறது. அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை. இயக்குநர் பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே. அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

 

கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது. உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது. யார் கதாநாயகி? அவர் எப்படி இருப்பார்? என்பது தான் அது. ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு. பிறகு படத்தின் நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. அவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது 'பேராண்மை'யிலும் நன்றாக நடித்திருந்தார். ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவர் உயரம் தெரியாதபடியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள். வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை. அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும்  இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார். கதையின்படி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வினோத், சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். 
 

 

 

ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட்டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது. பரண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன். அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண்  சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன். என்னை தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால் நீங்கள் "நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான்  உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந்நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்" என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும்  படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை!'' - நடிகர் அப்புக்குட்டி 

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
hrh

 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை சமூகவலைதளம் மூலமும், அறிக்கைகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தன் பிறந்தநாளான இன்று நடிகர் அப்புக்குட்டி கரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம். இது மனிதாபிமானத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும். இதுவரை  45 நாட்கள் கடந்து விட்டன. இதில் பல பலதரப்பட்ட மனிதர்களை அடையாளம் காண முடிகிறது. மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும் மனிதர்களையும், இருப்பதைப் பிரித்துக் கொடுக்கும் மனிதர்களையும் காண முடிகிறது. இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். அவர்கள் மத்தியில் இந்த நாட்டில்  தன்னாலான உதவிகளை எத்தனையோ பேர் பெரிய மனதோடு செய்து கொண்டிருக்கிறார்கள். இருட்டாக இருக்கிறது என்று சொல்பவரை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றுபவர் உயர்வானவர். 

 

இந்தச் சோதனையான காலத்தில் ஏதாவது உதவி செய்யுங்கள், முடிந்ததை உதவி செய்யுங்கள், சகமனிதனை மதியுங்கள். சிரமப்படுவோருக்குத் தன்னளவில் ஏதாவது செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். நானும் என்னளவில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை. நிம்மதி திரும்பினால் போதும். போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இறைவன் மீட்டுக் கொண்டு வருவான் நல்ல முடிவு விரைவில் வரும்.  மன தைரியத்துடன் எதிர்கொள்வோம். மக்கள் தைரியமா இருந்தால் சந்தோஷம் கிடைக்கும்'' என கூறியுள்ளார். 

 

Next Story

''இதற்காக என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன்'' - வசுந்தரா 

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. 

 

vasu

 

 

இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகை வசுந்தரா பேசுகையில்.... "இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார். அதற்காக இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இதில் இடம்பெற்றிருக்கிறது" என்றார்.