Apple CEO Tim Cook thanked Madhuri Dixit

Advertisment

உலகில் முன்னணியில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் சார்பில்சமீபத்தில் இந்தியாவில் நேரடி விற்பனை நிலையம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல், கணினி, மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றின் தேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் இதுநாள் வரை ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்கி வந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் தனக்கென தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக நேரடி விற்பனை நிலையம் மும்பையில் பாந்த்ரா குர்லா என்ற வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். இதற்காக இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரி டிம் குக்கைபிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மும்பைக்கு வருபவரை வடாபாவ் இல்லாமல் எப்படி வரவேற்பது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாதுரி தீட்சித்தின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டிம் குக், "முதல் முறையாக வடாபாவை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி மாதுரி தீட்சித். சுவையாக இருந்தது" எனப் பதிவிட்டுள்ளார். மும்பையைத்தொடர்ந்து ஆப்பிளின் 2வது விற்பனை நிலையத்தை டெல்லியில் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளார் டிம் குக்.