
நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாகத் தமிழில் 'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் இப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அனுஷ்கா மங்களூரில் நடந்த ‘பூத கோலா' விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூத கோலா நிகழ்வு 'காந்தாரா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. காந்தாரா படம் கர்நாடக மக்களின் தெய்வ வழிபாடான பூத கோலா நிகழ்வை மையப்படுத்தி உருவாகியிருக்கும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனுஷ்காவின் சொந்த ஊர் மங்களூர் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தாரா படம் வெளியான சமயத்தில், படக்குழுவினரையும் ரிஷப் பி ஷெட்டியையும் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா பதிவிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.