Advertisment

“தொடங்கிய இடத்திற்கு செல்கிறேன்” - அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு

309

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் அனுஷ்கா. ஆனால் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். அதன் பிறகு பழையபடி குறைத்தது போல் சில படங்களில் நடித்தார். ஆனால் இப்போது வரை முழுமையாக குறைக்கவில்லையாம். 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்று வருடங்களுக்கு இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2023ஆம் ஆண்டில் தான் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஒரு வருடம் கழித்து ‘காதி’ படம் மூலம் வந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்க வந்தாலும் பொதுவெளியில் அவர் தலை காண்பிக்கவில்லை. 

Advertisment

காதி படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை இல்லாத ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்திருந்தார். பட புரொமோஷனில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இது விமர்சனத்துக்கும் உள்ளானது. ஆனால் பட இயக்குநர் அது அவருடைய விருப்பம் என முற்றுப்புள்ளி வைத்தார். இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த அவர், பட விமர்சனத்தால் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் இருந்து சற்று விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “நீல ஒளியில் இருந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு மாறுகிறேன். உலகத்துடன் மீண்டும் இணைவதற்கும் ஸ்க்ரோலிங்கை தாண்டி வேலை செய்வதற்கும் எங்கிருந்து தொடங்கினோமோ அந்த இடத்திற்கு செல்வதற்கும் சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகி செல்கிறேன்.  விரைவில் உங்களை நிறைய கதையுடனும் நிறைய அன்புடனும் சந்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  

social media anushka shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe