anushka ghaati movie first look

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து காதி என்ற தெலுங்கு படத்திலும் கத்தனார் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று(07.11.2024), ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த சூழலில் அனுஷ்கா நடித்து வரும் காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் இயக்குநர் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார், நெற்றியில் பிண்டி மற்றும் பங்கா திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும் இரண்டு மூக்கு வளையங்களும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்து, படத்தில் அவரது பாத்திரம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

இப்படம் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது. இப்படத்திற்கு சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் கதை வழங்க, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார். இந்த பான் இந்தியா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.