Anurag Kashyap faces troubles for praising Bakasuran movie

Advertisment

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'பகாசூரன்' கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப், பகாசூரன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தென்னிந்தியாவில் பகாசூரன் படம் பற்றி நல்ல வரவேற்பை பெற்று வருவதாக அறிந்தேன். எனது நண்பர்கள் நட்டி மற்றும் செல்வராகவன் இருவருக்கும் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. "உங்களிடமிருந்து எதிர்பாராத ஒன்று இந்த பதிவு... பாலியல் குற்றங்களுக்கு பெண்களைக் குற்றம் சாட்டும் மிகவும் பிற்போக்குத்தனமான திரைப்படம் பகாசூரன். தயவுசெய்து அதைப் பார்த்துவிட்டு ட்வீட் செய்யுங்கள்" என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மேலும் ஒருவர் "அன்புள்ள அனுராக், நீங்கள் ஒரு அரிய தரமான இயக்குநர்களில் ஒருவர். நட்டி உங்கள் நண்பர் என்பதற்காக தயவு செய்து பிற்போக்குத்தனமான படங்களை விளம்பரப்படுத்தாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். இது போன்று பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

Advertisment

அனுராக் காஷ்யப், இதற்கு முன்பு தமிழ் இயக்குநர்கள் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குநர்களின் படங்களைப் பார்த்து பாராட்டியுள்ளார். கடைசியாக பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.