82வது வெனிஸ் திரைப்பட விழா கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் தொடங்கி இம்மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில் நடந்த இந்த விழாவில் ஓரிசோன்டி பிரிவில், சிறந்த இயக்குநருக்கான விருதை இந்திய பெண்மணியான அனுபர்னா ராய் ‘சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்’(Songs of Forgotten Trees) என்ற படத்திற்காக வென்றுள்ளார். இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதை முதல் இந்திய இயக்குநராக பெற்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 

Advertisment

ஓரிசோன்டி பிரிவு என்பது புதிய சினிமாக்களை அங்கீரக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதில் புது முக இயக்குநர்களின் படங்கள், இளம் திறமையாளர்களின் படைப்புகள், சுயாதீன படைப்புகள், பெரிதாக பேசப்படாத சினிமாக்கள் ஆகியவற்றை போற்றும். இந்த அம்சங்களில் அடங்கும் படைப்புகள் இந்த பிரிவில் ஸ்கீர்ன் செய்யப்படும். இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து மராத்தி உட்பட நான்கு மொழிகளில் வெளியான ‘கோர்ட்’ மற்றும் இந்தி மொழி படமான ‘ஸ்டோலன்’ ஆகிய படங்கள் ஸ்கீரீன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் ‘சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்’ படமும் ஸ்கீரீன் செய்யப்பட்டது.   

விருது வென்ற பிறகு மேடையில் பேசிய அனுபர்னா ராய், “இந்த விருதை என் நாட்டில், என் ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமர்பிக்கிறேன். அதே சமயம் பாலஸ்தீனத்தில் நடக்கும் பேரழிவை பற்றி பேச விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும் அமைதியையும் சுதந்திரத்தையும் விரும்புகிறது. அதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். நான் இப்படி பேசியதற்காக என் நாடு கவலையடையலாம், ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை” என்றார். இவர் இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்தவர். வயது 35.

‘சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்’ படம், மும்பையில் புலம்பெயர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது. இப்படத்தை நாஸ் ஷேக் மற்றும் சுமி பாகேல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க பிபன்ஷு ராய், ரோமில் மோடி மற்றும் ரஞ்சன் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வழங்கியுள்ளார்.