பாலகிருஷ்ணா பஞ்சாயத்து - முடித்து வைத்த அஞ்சலி 

anjali about balakrishna viral video issue

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் விஸ்வக் சென், நேஹா ஷெட்டி, அஞ்சலி நடிப்பில்உருவாகியுள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி'. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 28ஆம் தேதி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் விஸ்வக் சென், நேஹா ஷெட்டி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள மூத்த நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பாலகிருஷ்ணா அஞ்சலியைத் தள்ளி நிற்க சொல்லி தள்ளிவிட, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. மேடையில் படக்குழுவினர் அனைவரும் குரூப் ஃபோட்டோ எடுக்கவிருந்த நிலையில் பாலகிருஷ்ணா இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து பாலகிருஷ்ணா செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. அதே சமயம் அவர் விளையாட்டாக செய்ததாகவும் சிலர் கூறினர். பாலகிருஷ்ணா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் அவரின் செயல்பாடுகள் இதே போல் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தச் சம்பவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், அஞ்சலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணா காரும் நானும் ஒருவரையொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் மதித்து வருகிறோம். அதோடு நீண்ட காலமாக நட்புடனும் இருந்து வருகிறோம். அவருடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டது சந்தோஷம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Anjali balakrishna
இதையும் படியுங்கள்
Subscribe