
தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமான அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு குறுகிய காலத்திலேயே இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். படங்கள் மட்டுமல்லாது இசை நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட சில நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள அனிருத் இதுவரை தமிழ்நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியதில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது அடுத்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்போது, "10 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் எதிர்பார்த்த நாள் இறுதியாக வந்துவிட்டதாகவும், இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கும் எனவும் நம் தமிழ்நாட்டில் எங்களுடைய முதல் இசை நிகழ்ச்சி இது” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நடக்கவுள்ள இந்த இசை நிகழ்ச்சி வருகிற 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. அதனால் இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பிரபல மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு அனிருத்தின் 'டிப்பம் டப்பம்' பாடல் இசையமைக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
அனிருத் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்', ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் 'ஜவான்', கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'ஏகே 62' உள்ளிட்ட படங்களில் இசையமைக்கிறார்.