இசையமைப்பாளர் அனிருத் ‘ஹுக்கும்’ என்ற பெயரில் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்ச்நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நாளை(23.08.2025) நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால் அங்கு ரசிகர்களின் பாதுகாப்பு, பார்க்கிங் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 4 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் இதனால் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனவும் செய்யூர் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ. பனையூர் பாபு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிகழ்ச்சிக்கு விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதோடு இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.