சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ளப் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அரங்கத்திற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த அனிருத், “எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இது 8வது படமென நினைக்கிறேன். அவருடன் இணைவது எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். நானும் அவரும் ஒரே டைம்ல தான் சினிமாவுக்குள் வந்தோம். அதனால் அவருடன் எனக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷலான உறவு. அவருடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு க்ளோசான ஒரு ஃப்ரண்ட். அதே போல் ஏ.ஆர்.முருகதாஸ் சாருடன் மூணாவது படம். எனக்கு முதல் முறை பெரிய படம் பண்ண வாய்ப்பு கொடுத்தது அவர் தான். அன்னைக்கு எனக்கு 21 வயசு. அந்த நன்றிக்கடன் எனக்கு எப்போதுமே இருக்கு. இந்த படம் ஃபயரா இருக்கும்” என்றார். தொடர்ந்து விஜய்யின் ஜனநாயகன் குறித்து பேசிய அவர், “மதராஸிக்கு அப்புறம் எனக்கு ஜனநாயகன் தான். படம் ஃபுல் பவரா வந்திருக்கு. அவரை சினிமாவில் மிஸ் செய்ய போகிறோம். ” என்றார்.
இதையடுத்து விழா மேடையில் பேசிய அனிருத், “நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் எதிர்நீச்சல். சிவகார்த்திகேயன் 50 கோடி, 100 கோடி, 300 கோடி வரை இப்போது வசூல் அடிச்சுட்டார். டிரெய்லர்ல 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வார். அது மாதிரி இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன். ஒரு நாள் நான் ஃபீல்ட் அவுட் ஆவேன், அப்போது என் மனம், சிவகார்த்திகேயன் ஜெயித்தால் நான் ஜெயித்ததாக நினைத்து சந்தோஷப்படும்” என்றார். இதைக் கீழிருந்து கேட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன்கொஞ்சம் எமொஷ்னல் ஆனார்.
அனிருத் பேசியது குறித்து சிவகார்த்தியேன் மேடையில் பேசும் போது, “அவர் ஃபீல்ட் அவுட்-லாம் ஆகமாட்டார். அதற்கு வாய்ப்பே கிடையாது. ஷாருக்கான் ஆரம்பிச்சு எல்லாரையும் பார்த்துவிட்டார். ஆயிரம் கோடி தொட்டு, இன்னும் இரண்டாயிரம், மூவாயிரம், நாலாயிரம்னு பல ரெக்கார்டுகள் அவர் பண்ண வேண்டியிருக்கு. அனிருத்துடன் நான் எந்தளவு நெருக்கம் என்றால், இப்போ நான் எந்த படம் கேட்டாலும் உடனே ஓகே சொல்லிவிடுவார். அனால் அப்படி நான் போய் கேட்கவே மாட்டேன். அதுதான் அவருக்கு நான் கொடுக்கிற மரியாதை. ஒரு வேளை கேட்க போனால், அவருக்கு ஏற்றமாதிரி சரியான படத்துடன் தான் போய் கேட்பேன். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். எதுக்காக எனக் கேட்டால், வெற்றியை எப்படி கையாள்வது என்பதற்கு. அவர் மேடையில் சொன்ன வார்த்தைக்கும், அன்புக்கும் மற்றும் பாடல்களுக்கும் ரொம்ப நன்றி” என்றார்.