துணை நடிகை சிந்து காலமானார். அங்காடி தெரு படத்தில், பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகை சிந்து. அதில் 'சின்னம்மா' என்ற பெயரில் நடித்திருப்பார். தொடர்ந்து நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து கரோனா காலகட்டத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டதாக ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். மேலும் மிகவும் அவதிப்படுவதாகவும் பலரது உதவி தேவைப்படுகிறது எனவும் உருக்கமுடன் பேசியிருந்தார்.
போதிய மருத்துவ உதவிஅவருக்கு கிடைக்காததால், நாளடைவில் அவரது உடல் நலம் மோசமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ளஅவரது இல்லத்தில் இன்று அதிகாலை அவர் இறந்துள்ளார். சரியாக 2.15 மணிக்கு காலமானதாக கூறப்படுகிறது. அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இறுதிச் சடங்கு இன்று விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெறவுள்ளது.