பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. சிறந்த பாடகியான ஆண்ட்ரியா கடைசியாக விஸ்வரூபம் 2, வட சென்னை முதலிய படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகமால் இருந்தார். கடந்த சில மாதங்களாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால் சில மாதங்களாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அவரை தாக்கிய சோகம் எது என்பது பற்றி தெரியாமல் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார். சோகத்தை பிரதானப்படுத்துவதை போன்று அந்த கவிதை அமைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, " நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்" என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புரோக்கன் விங்க் என்ற இந்த புத்தகத்தில் விளக்கமாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆண்ட்ரியா யாரால் ஏமாற்றப்பட்டார் என்பதை அறிந்துகொள்வதற்காக அவரது ரசிகர்கள் அந்த புத்தகத்தை கடைகளில் தேடி வருகிறார்கள்.