நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரைக்காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் மற்றும் பொது மக்களும் கூடினர். கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்து அது பெரிய துயர சம்பவமாக மாறியது. மூச்சுத்திணறியும் மயக்கமடைந்தும் 41 நபர்கள் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisment

இந்த துயரச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தேசிய தலைவர்கள் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறி பின்பு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தும் வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிவாரண நிதி, வழக்குப் பதிவு, ஆணை விசாரனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  

Advertisment

இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் இந்த துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, ஜி.வி.பிரகாஷ், வடிவேலு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ராஜ் கிரண், கார்த்தி, ரவி மோகன், டி.ராஜேந்தர், யுவன் ஷங்கர் ராஜா, லதா ரஜினிகாந்த் ஆகியோர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கலும் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தாருக்கு அறுதலும் தெரிவித்தனர். 

இவர்கள் வரிசையில் தற்போது ஒரு படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆண்ட்ரியா - கவின் நடித்து வரும் ‘மாஸ்க்’ குழுவினர், “கரூரில் நடத்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். இதனை ஆண்ட்ரியா தனது எக்ஸ் பக்கம் மூலம் படக்குழு சார்பில் பகிர்ந்துள்ளார்.  

Advertisment