andhra cm jagan mohan praises rrr for grabing oscar

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில்ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின்'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.

Advertisment

இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆந்திரமுதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தெலுங்கு கொடி உயரப் பறக்கிறது. நம்முடைய நாட்டுப்புற பாரம்பரியத்தை கொண்டாடும் இப்பாடலுக்கு சர்வதேச அளவில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். என்னையும், பல கோடி தெலுங்கு மக்களையும், அனைத்து இந்திய மக்களையும் பெருமைப்படச் செய்துள்ளீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நடிகர் ராம்சரன், "ஆர்.ஆர்.ஆர் நம் வாழ்விலும் இந்திய சினிமா வரலாற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த படமாக எப்போதும் இருக்கும். ஆஸ்கர் விருது வென்றதும் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை வழங்கிய ராஜமௌலி மற்றும் கீரவாணி இருவருக்குமே நன்றி" எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர், "நாங்கள் ஆஸ்கரை வென்றுவிட்டோம்" எனக் குறிப்பிட்டு ராஜமௌலி மற்றும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.