anbu mayilswamy speech at his debut movie Eman Kattalai Trailer Launch

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், வி.சுப்பையன் கதை, வசனத்தில், எஸ்.ராஜசேகர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘எமன் கட்டளை’. இதில் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக சந்திரிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஜூனன், ஆர்.சுந்தராஜன், சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், மதன் பாப், பவர் ஸ்டார் சீனிவாசன், மதுமிதா, அனுமோகன், பாண்டு, சிசர் மனோகர், டி.பி.கஜேந்திரன்,, கராத்தே ராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு என்.எஸ்.கே இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜனவரி 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் நாயகன் அன்பு பேசுகையில், “தயாரிப்பாளர் கார்த்திகேயன் சார் இல்லை என்றால் இந்த படம் இல்லை, அவருக்கு நன்றி. இந்த படத்திற்காக என்னை அழைத்த போது, அப்பா - மகன் என்று இருந்தார்கள், அதுவே எனக்கு பிடித்து விட்டது. அப்பா கதை, மகன் இயக்குநர் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு அர்ஜூனனை சந்தித்தேன், ஓகே என்று சொல்லிவிட்டேன். பிறகு படப்பிடிப்புக்கு சென்ற போது முதல் நாளில் நான் கேமராமேன் கார்த்திக்ராஜா சாரை சந்தித்தேன். அவருடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்பா - மகன் என்று தொடங்கி இப்போது மயில்சாமி - அன்பு என்று வந்து நிற்கிறேன், என்றார். அவர் எனக்கு நிறைய விசயங்கள் சொல்வார். சிங்கிள் டேக் என்ற ஒரு ஃபார்மட் அவர் வைத்திருப்பார், ஆனால் இங்கு அவரது ஃபார்மட் உடைந்துவிட்டது. ஒரு நாள் அவரே டென்ஷனாகி விட்டார். பிறகு அவர் சொல்வதை கேட்டு கேட்டு நடித்தோம். படம் மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் ஒரே காமெடியாக இருக்கும். ஆர்.சுந்தராஜன் சார், டெல்லி கணேஷ் சார் என பல ஜாம்பவான்களுடன் நடித்தது மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் போனது. அடுத்த மாதம் படம் வெளியாகிறது. உங்களது ஆதரவு வேண்டும்” என்றார்.