தனுஷ் இந்தியில் அறிமுகமான படம் ‘ராஞ்சனா’. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார். தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். மேலும் அபய் தியோல், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றனர். குறிப்பாக ‘அந்த கங்கை ஆற்றிலே ஒரு வண்ணப் பறவை மூழ்கியதோ நீரோடு...’ என ஆரம்பிக்கும் படத்தின் டைட்டில் ட்ராக் இன்றளவும் ரீல்ஸ் மூலம் வைரலானது.
இப்படத்தை அடுத்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘அந்த்ராங்கி ரே’ படத்தில் நடித்தார். இப்படம் 'கலாட்டா கல்யாணம்' என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இதையடுத்து தற்போது மீண்டும் ‘தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein)’ என்ற தலைப்பில் மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படமும் ராஞ்சனா பட கதையை மையப்படுத்தி உருவாகிறது. இந்த நிலையில் ராஞ்சனா படம் 12 வருடங்கள் கழித்து நாளை(01.08.2025) ரீ ரிலிஸாகிறது. இதன் அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் மேலும் ஒரு புது அறிவிப்பு வெளியானது. அதாவது ஏஐ மூலம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியமைக்கவுள்ளதாக படத்தை முன்பு வெளியிட்ட எராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்திருந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துவிடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு இயக்குநர் ஆனந்த் எல். ராயை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ச்சியாக சமீப பேட்டிகளில் தனக்கு அதில் உடன்பாடில்லை எனக் கூறிவந்தார். இந்த நிலையில் ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வேதனையுடன் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த மூன்று வாரங்களாகவே என் நாட்கள் நல்ல விதமாக இல்லை. கடும் அப்செட்டில் அமைந்தது. ராஞ்சனா படத்தை எனது ஒப்புதல் இல்லாமல் மாற்றியமைத்து, மீண்டும் வெளியிடுவது பேரழிவைத் தருகிறது. அதில் மோசமானவை என்னவென்றால், மிக எளிமையாக சாதாரணமாக மாற்றியமைக்கப்பட்ட விஷயம். இருப்பினும் ராஞ்சனா, தைரியம் மற்றும் உண்மையினால் முதல் இடத்தில் இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
தெளிவாகச் சொல்கிறேன், ஏ ஐ-யால் மாற்றப்பட்ட ராஞ்சனா வெர்ஷனை நான் ஆதரிக்கவில்லை. அது அங்கீகரிக்கப்படாத ஒன்று. அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. எங்கள் குழுவின் பங்கும் இல்லை. அதனால் புது ராஞ்சனா எப்படியாக இருந்தாலும் அது நாங்கள் விரும்பி தயாரித்த படம் இல்லை. ராஞ்சனா எங்களுக்கும் வெறும் படம் மட்டும் இல்லை. உணர்வுகளால் வடிவமைக்கப்பட்ட ஒன்று. ஆனால் அவர்கள் தற்போது செய்திருப்பது படத்தின் நோக்கத்தையும் ஆன்மாவையும் அகற்றும் செயலாகும். நமது படைப்பை ஒரு இயந்திரம் மூலம் மாற்றியமைத்து புதுமையாக உருவாக்க முடியும் என்பது மிகவும் அவமரியாதைக்குரியது. இது நாங்கள் உருவாக்கிய படத்திற்கு செய்யும் துரோகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/31/194-2025-07-31-18-52-59.jpg)