Amitabh Bachchan said about t20 world cup 2024

Advertisment

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதனைத்தொடர்ந்து, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார்.

இந்த நிலையில், நான் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பிளாக் (Blog) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா!!! T20 WORLD CUP 2024. உற்சாகம், உணர்ச்சிகள் மற்றும் பயம் என எல்லாம் முடிந்தது. எப்போதும் போல இந்த இறுதிப் போட்டியை நான் டி.வியில் பார்க்கவில்லை. நான் இறுதிப் போட்டியைப் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடுகிறது. இனி எதுவும் எனது பெருமூளைக்குள் நுழையாது. இந்திய அணியினர் சிந்திய கண்ணீருக்கு இசைவாக நம் கண்களிலும் நீராய் ஓடியது” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தொலைக்காட்சியில் இந்திய அணி விளையாடும் போட்டியை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிடும் என்கிற தோற்றம் ஒன்று உலாவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.