
இந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக கருதப்படும் அமிதாப் பச்சன் இன்று (11.10.2022) தனது 80வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தன் திரைத்துறை பயணத்தில் கிட்டத்தட்ட 190 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்திய விருதுகளில் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்காக 4 தேசிய விருதையும் 2018ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் 80வது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமிதாப் பச்சன் ஜிக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமை மற்றும் வாழும் லெஜண்ட், தனது 80வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் கலைப் பண்புகள் எதிர்காலத்திலும் இந்தியத் திரையுலகில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி இன்னும் பல தசாப்தங்களுக்கு ரசிகர்களை கவர வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஜினிகாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "தி லெஜண்ட். எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர்... நமது புகழ்பெற்ற இந்திய திரைப்பட சகோதரத்துவத்தின் ஒரு உண்மையான உணர்வு மற்றும் சூப்பர் ஹீரோ. இவர் தனது 80வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய அமிதாப் ஜி. எப்போதும் உங்கள் மீது நிறைய அன்புடனும் வாழ்த்துக்களுடனும்." என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே திரை பிரபலங்கள் பலரும் மற்றும் ரசிகர்களும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
A very happy 80th birthday to Amitabh Bachchan Ji. He is one of India’s most remarkable film personalities who has enthralled and entertained audiences across generations. May he lead a long and healthy life. @SrBachchan— Narendra Modi (@narendramodi) October 11, 2022