Skip to main content

ஓ.டி.டி.யில் வெளியாகும் படம்... அதிருப்தியில் 'ஐநாக்ஸ்' குழுமம்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

gulabo


கரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ளது. அதற்கு முன்பிலிருந்து திரையரங்கம், மால் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுவிட்டன. தற்போது லாக்டவுன் எடுக்கப்பட்டாலும், பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் திறப்பது எப்போது என்பது பலருக்கும் கேள்வியாகவே உள்ளது.


பாலிவுட்டில் தயார் நிலையிலுள்ள பெரும் பட்ஜெட் படங்களை ஓ.டி.டி. பிளட்ஃபார்மில் வெளியிட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயுஷ்மான் குரானா மற்றும் அமிதாப் பச்சனின் நடிப்பில் சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள குலாபோ சிதாபோ படம் அமேசான் ப்ரைமில் ஜூன் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிரபல சினிமா திரையரங்கு குழுமமான 'ஐநாக்ஸ்' அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தங்கள் படத்தைத் திரையரங்கில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஒரு தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பற்றி 'ஐநாக்ஸ்' நிறுவனம் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்புகிறது. அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலகளாவிய திரைப்பட வெளியிடலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

 

 


திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கங்களுக்கும் எப்போதும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தே வந்துள்ளது. இதில் ஒருவருடைய நடவடிக்கைதான் இன்னொருவரது வருவாய்க்கு வழிவகுக்கும். நல்ல படங்கள் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக நாடு முழுக்க உலகத் தரம் வாய்ந்த திரைகளை 'ஐநாக்ஸ்' நிறுவியுள்ளது. பல்லாண்டுகாலமாக நீடித்து வரும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உதவி வந்துள்ளது. ஒருவரோடு ஒருவர் தோள் நின்று திரைத்துறையை மீட்டெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் சில பங்குதாரர்கள் இந்த பரஸ்பர உறவு முறையில் ஆர்வமில்லாமல் செயல்படுவது வருத்தமாக உள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கவேண்டிய தயாரிப்பாளர்கள், ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள். இதுபோன்ற நண்பர்களால் 'ஐநாக்ஸ்' நிறுவனம் தன்னுடைய தேர்வுகளை ஆராய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

 


அனைத்துத் தயாரிப்பாளர்களையும் திரையரங்க வெளியிடலைத் தவிர்க்காமல், பழைய நடைமுறையையே தொடருமாறு வலியுறுத்துகிறது. அதுவே இந்தச் சங்கிலித் தொடரில் இருக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் நல்லது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்