American Society of Cinematographers ropes in Ravi Varman as a member

ஆட்டோகிராஃப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு அமைத்து முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் ரவி வர்மன். பாலிவுட்டில் முக்கிய இயக்குநர்களான ராஜ்குமார் ஹிராணி, சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோருடன் பணியாற்றி அங்கும் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கியுள்ளார். இப்போது விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இவர் உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். இந்த சங்கம்(ASC) ஒளிப்பதிவின் கலை மற்றும் அறிவியலை மேம்படுத்துவதற்கும், ஒளிப்பதிவாளர்களை ஒன்றிணைத்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், நுட்பங்களைப் பற்றி விவாதிப்பதற்கும், திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக ஊக்குவிப்பதற்கும் 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சங்கத்தின் முதல் இந்திய ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் இணைத்துக் கொள்ளப்பட்டார். அதையடுத்து இரண்டாவதாக தற்போது ரவி வர்மன் இணைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து ரவி வர்மன் பேசுகையில், “உலகம் முழுவதிலுமிருந்து ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் சேர கனவு காண்கிறார்கள். ஆஸ்கர் உட்பட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக உள்ள ஒரு தளத்தில் நானும் சேர்க்கப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது” என்றார். ஏற்கனவே தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ள ரவிவர்மன் தற்போது சர்வதேச சங்கத்தில் இணைந்துள்ளதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.