Skip to main content

"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை..." விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

ameer

 

முத்தையா முரளிதரன் பட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் இதில் நடிக்க இருந்த விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்திருந்தார். 

 

இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு அளிக்கப்பட்ட மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தைப் பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம், நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது போல் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய (சட்டம் அனுமதித்த) தொழிலை செய்வதற்கும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் தன் தொழிலான நடிப்பின் மூலம், முத்தையா முரளிதரன் எனும் கிரிக்கெட் வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் விஜயசேதுபதி ஒப்புக்கொண்டார். 

 

முத்தையா முரளிதரன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் இன்னும் முடிவு பெறாத, நீதி கிடைக்கப் பெறாத ஈழ அரசியல் இருக்கின்ற காரணத்தாலும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாறு இருப்பதாலும் அந்தக் கதாபாத்திரத்தை தவிர்த்து விடுங்கள் என்று நடிகர் விஜயசேதுபதியின் மீது அன்பு கொண்டவர்களும் ஈழ அரசியலின் மீது ஆர்வம் கொண்டவர்களும் பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும் உலகெங்கும் வாழும் ஈழச் சொந்தங்களும் நடிகர் விஜயசேதுபதியிடம் கோரிக்கை வைத்தனர். சிலர் கடும் சொற்களால் எதிர்ப்பும் தெரிவித்தனர். 


அந்தக் கோரிக்கை மற்றும் எதிர்ப்பின் பலனாக முத்தையா முரளிதரன் அவர்களே தனது படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று நடிகர் விஜயசேதுபதியை கேட்டுக் கொண்டதன் பேரில், '800' எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திலிருந்து நடிகர் விஜயசேதுபதி விலகிக்கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

 

Ad

 

இந்நிலையில், அவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாகவும் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும் அவரின் மகளை தவறாகப் பேசி மிரட்டும் பாணியிலும் சிலர் பொது வெளியில் கருத்துகளை பதிவிட்டிருப்பது அநாகரீகத்தின் உச்சம் என்றும் அநீதியான செயல் என்றும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொது வெளியில் பயணிக்கிற ஒவ்வொரு மனிதனின் செயலுக்காகவும் அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்துவதும் பொது வெளியில் நச்சுக் கருத்துக்களைப் பதிவிடுவதும் நல்லதல்ல. அது ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது. மேலும் அப்படிச் செய்பவர்கள் நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். 

 

இது போன்ற நிகழ்வுகள் இன்னொரு முறை நம் மண்ணில் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட கயவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் நமது அரசாங்கம் மற்றும் காவல் துறையின் தலையாய கடமையுமாகும் என வேண்டுகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எப்போது அழைத்தாலும் விசாரணைக்குத் தயார்” - அமீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
ameer about producer dmk jaffer sadiq issue

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாத 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான அமீர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22 ஆம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமே” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத் தெளிவாக விளக்கிய பிறகும், என் மீது பேரன்பு கொண்ட சில ஊடகவியலாளர்களும் நண்பர்களும் சமூக வலைதளப் பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் மார்க்கத்தையும் கும்பிடக் கூடியவன் நான். அப்படி இருக்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்செயலில் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அல்லது என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேற எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது. நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இறைவன் மிகப் பெரியவன்” எனப் பேசியுள்ளார். 

Next Story

“ஜல்லிக்கட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்” - முதல்வருக்கு அமீர் கோரிக்கை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
ameer request to cm stalin ragards jallikattu

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக அளவில் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கக் காசு, கார், பைக், பிளாஸ்டிக் பொருட்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது,  “வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான்,அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும்,வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்” என தமிழக அரசை கேட்டு கொண்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, அமீரும் முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டோடு சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..’என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவண செய்யக் கேட்டுக் கொள்கிறேன். ‘தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!’ என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.