தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் எனக் கூறி பேசியிருந்தார். இது விமர்சனத்துக்குள்ளானது. அதே போல் மாநாட்டில் தொண்டர்களை பவுன்சர்கள் தாக்கியது சம்பவமும் பேசு பொருளாக இருக்கிறது. ஆனால் தாக்கப்பட்ட தொண்டர் யாரென்ற குழப்பம் நீடிக்கிறது. இரண்டு நபரக்ள் நாங்கள் தான் தாக்குதலுக்கு உள்ளானேன் என கூறுகின்றனர். இதில் ஒரு இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் விஜய் உள்ளிட்ட பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த சம்பவங்கள் தொடர்பாக இயக்குநர் மற்றும் நடிகர் அமீரிடம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த விஷயத்திலே இரண்டு முரணான செய்திகள் இருக்கு. யார் உண்மையாக தாக்கப்பட்டார் என இன்னும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அந்த வழக்கில் விஜய்யை முதல் குற்றவாளியாக சேர்த்திருப்பது, காவல் துறையின் கடமையை கேள்வி குறியாக்குகிறது. இது மாதிரியான பொது நிகழ்ச்சிகளில் நடக்கக்கூடிய அசம்பாவிதங்களுக்கு கட்சியின் தலைவரை முதல் குற்றவாளியாக சேர்ப்பது, தேவையற்ற அரசியல். களத்தில் யார் நின்றாலும் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இது மாதிரியான நெருக்கடிகளை கொடுக்கக்கூடாது.

அதே போல் விஜய்யை நோக்கி ஓடி வந்தவர் ரசிகராக இல்லை என்றால் என்ன செய்வது. இந்த கோணத்திலும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஓடி வந்தவர் விஜய்யை தாக்கியிருந்தால், இவ்வளவு பவுன்சர்கள் இருந்தும் பாதுகாப்பு இல்லையே என விமர்சனம் எழுந்திருக்கும். அதனால் இந்த செயலுக்கு இரண்டு பக்கம் இருக்கிறது. இது அந்த தலைவருக்கும் ரசிகருக்கும் உள்ள பிரச்சனை. பொதுப் பிரச்சனையாக விவாதிக்க தேவையில்லை” என்றார். 

விஜய் அங்கிள் என பேசியது தொடர்பான கேள்விக்கு, “விஜய் பேசிய அங்கிள் என்ற வார்த்தை தவறானது கிடையாது. ஆனால் அந்த வார்த்தையை உபயோகப்படுத்துகிற இடமும் ஆளும் முக்கியமானது. விஜய், ஒரு நடிகராக மட்டும் இருந்து அங்கிள் என சொல்லியிருந்தால் தவறு கிடையாது. ஆனால் அவர் ஒரு கட்சியின் தலைவர், பொதுவெளியில் பேசும் போது முதல்வரை மாண்புமிகு எனக் கூறுவது தான், சரியாக இருக்கும். அப்படி கூப்பிடுவதுதான் முதல்வர் பதவிக்கு நாம் கொடுக்கிற கன்னியம். அந்த மரியாதையை கொடுப்பது ஒரு குடிமகனாக அவசியம். அதனால் முதல்வரை சார் என்றோ, அங்கிள் என்றோ சொல்வது ஒரு கட்சியின் தலைவருக்கு ஏற்புடையதல்ல. முதல் மாநாட்டில் யாரையும் தரக்குறைவாக பேசமாட்டேன் என சொன்னார். ஆனால் இரண்டாவது மாநாட்டில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக அங்கிள் என சொல்லியிருக்கிறார். இது அவர் இன்னும் பக்குவபட வேண்டும் என்பதை உணர்த்துகிறது” என்றார்.