Skip to main content

"ஒரு தேசத்தின் பிரதமர் அப்படி சொல்லக்கூடாது" - அமீர்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

ameer about pm modi

 

இயக்குநர் மற்றும் நடிகரான அமீர், தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் திரைத்துறையைத் தாண்டி தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் அமீர். புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை திறந்துள்ளார். இந்த ரெஸ்டாரன்ட் சென்னை பெருநகரில் கிழக்கு கடற்கரை சாலையில், உத்தண்டி டோல் கேட் அருகே '4 ஏஎம் காஃபி மற்றும் கிட்சன்' (4am Coffee & Kitchen) என்ற பெயரில் அமைந்திருக்கிறது. 

 

இதன் திறப்பு விழாவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் வருகை தந்து திறந்து வைத்தனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் அமீருக்கு வாழ்த்துக்கள் சொல்லியுள்ளனர். பின்பு அமீரிடம், டீக்கடையில் வேலை பார்த்து இன்று பிரதமராக இருக்கும் மோடி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், "டீ கடை நடத்துவது யாரும் கேவலம் என்று சொல்லவில்லை. அதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நேர்மையாக தொழில் செய்பவர்கள் அனைவரையும் கௌரவக் குறைவாக நாம் பார்க்கவில்லை. அவர் டீ கடையில் இருந்திருந்தாலும் அதை கேவலமாக சொல்லவில்லை. 

 

படித்தவர்கள் டீ கடைக்கு செல்லுங்கள் என்று ஒரு தேசத்தின் பிரதமர் சொல்லக்கூடாது. அதை தான் விமர்சிக்கிறோம். படித்தவர்கள் இந்த வேலைக்கு போக வேண்டும் என்று யாரும் முடிவெடுக்கக் கூடாது. என்ன வேலைக்கு போக வேண்டும் என்பது படித்தவர்களுக்கு தெரியும். அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார். 

Next Story

நள்ளிரவு வரை நடந்த ரெய்டு - சிக்கலில் அமீர்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
ameer about ed raid and ncb investigation regards jaffer sadiq

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.       

இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ''11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான். வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான். சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது.

விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.