Skip to main content

“சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன்” - மௌனம் கலைத்த அமீர்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

ameer about gnanavel raja paruthiveeran issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பருத்தி வீரன் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்சனை  சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.

 

பருத்தி வீரன் தொடர்பாகவும், என்னுடைய திரைப் பயணம் தொடர்பாகவும், ஞானவேல் ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரமே. பருத்தி வீரன் திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணாமல் போனவர் அவர்.

 

அதன் பின்னரே, நான் எனது நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், பருத்தி வீரன் படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்பிரச்சனையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. பருத்தி வீரன் திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து 'படத்தை நீங்களே வெளியிடுங்கள்’ என்று சொன்னவர்களும், அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.!

 

பருத்தி வீரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன். நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டுமொத்த திரையுலகத்தையும் திசை திருப்பிவிடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.!

 

உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் தொடர்பான வழக்கு மற்றும் விபரங்கள் அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாலும், அதில் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிற நிலையில், என் பக்கம் நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி. நான், மாயவலை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இனியும் இந்தப் பிரச்சனை தொடர்பாக என்னை யாரும் அணுக வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்