ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டு பேசுகையில், “திமுகவை எதிர்த்து பேச மாட்டார்கள் என்று சொல்லும் பட்டியலில் என்னையும் வைத்திருப்பார்கள். ஆனால் 2009ல் திமுகவை எதிர்த்து தான் நான் பொது வாழ்க்கைக்கே வந்தேன். அன்றைய காலக்கட்டத்தில் திமுகவை எதிர்க்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அதே சமயம் இன்றைய காலக்கட்டத்தில் திமுகவை ஆதரிக்க வேண்டிய நிலையும் எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் சனாதன அரசை எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காக. 

Advertisment

ஓட்டு போடுவதும், ஓட்டு வாங்குவதும் எப்படி ஜனநாயகமோ, அதேபோல ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் அரசைக் கேள்வி கேட்பதும் ஜனநாயகம்தான். ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டியது திமுக அரசின் கட்டாயக் கடமையாக இருக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம், சட்டம் நிறைவேறும் வரை தொடரும். இந்திய அரசியலைப்பு சட்டத்தில் எதிர்கட்சியாக இருப்பவர்களும் சில சட்டங்களை நிறைவேற்றலாம் என ஒரு பிரிவு இருந்திருந்தால் இந்த நாட்டில் பல நல்ல சட்டங்கள் வந்திருக்கும். ஆணவம் என்பது எதோ ஒரு விதத்தில் தன்னை உயர்ந்தவனாக உணரவைப்பது. 

ஆணவக் கொலைகள் பட்டியல் சமூக மக்கள் காதலித்தால் மட்டும் கொல்லப்படுவதில்லை. கும்பகோணத்திலும் தருமபுரியிலும் பட்டியலின பெண்கள் மாற்று சமூக பையன்களை காதலித்ததால் அந்த பையன்களை, பெண் வீட்டார் தரப்பில் படுகொலை செய்தார்கள். அதனால் ஆணவக் கொலைகள் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பதால் வருவதைத் தாண்டி, ஒரு அகங்காரத்தில் வருவது தான். அந்த நோய் கலையப்பட வேண்டும். இந்த சட்டம் அவசியமானது. காலத்தின் கட்டாயம். அதை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடும் தோழர்களுடன் நான் துணை நிற்பேன்” என்றார்.