Skip to main content

'தள்ளிப்போகும் முன்னணி நடிகரின் படம்...' அமேசான் ப்ரைம் அறிவிப்பு!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

madhavan

 

2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சார்லீ'. துல்கர் சல்மான் மற்றும் பார்வதி மேனன் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு கடும்போட்டி நிலவியது. இறுதியில், பிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் இவ்வுரிமையைக் கைப்பற்றியது.

 

தமிழில் 'மாறா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, திலீப் குமார் இயக்கினார். ஜிப்ரான் இசையமைத்தார். கரோனா நெருக்கடி காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தை நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட, தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி, அமேசான் ப்ரைம் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த அக்டோபர் மாதமே அமேசான் நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து, நாளை மறுநாள் இப்படம் வெளியாக இருந்தநிலையில், இப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'மாறா' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

 

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த புதிய பதவி

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

madhavan appointed as FTII head

 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் எனப் பல்வேறு மொழிகளில் பயணித்துள்ளார் நடிகர் மாதவன். கடந்த ஆண்டு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற தலைப்பில் இயக்கியதோடு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். 

 

இப்படம் கடந்த வருடம் பிரான்சில் நடந்த உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர்.  

 

இதையடுத்து சமீபத்தில் 69வது தேசியத் திரைப்பட விருது அறிவிப்பில் சிறந்த படம் என்ற பிரிவில் 'ராக்கெட்ரி' படத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"மாஸ்டர்" - தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட இயக்குநரை புகழ்ந்த மாதவன்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

madhavan appreciate Vivek Agnihotri

 

பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் வந்த நிலையில், பெரும் சர்ச்சை உண்டானது. 

 

மேலும், கோவாவில் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அவ்விழாவின் தேர்வுக்குழு தலைவர் வெறுப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறது என விமர்சித்திருந்தார். இப்படி பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, தற்போது தி வேக்ஸின் வார் (The Vaccine War) என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போரின் அடிப்படையிலும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சிகளின் அடிப்படையிலும் உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

 

இப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த மாதவன் பட இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி, மிகவும் சவாலான காலகட்டத்தில் தேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்த இந்திய விஞ்ஞான சமூகத்தின் அற்புதமான தியாகங்கள் மற்றும் சாதனைகள் வியப்படைய செய்தது. 

 

கதை சொல்லுவதில் மாஸ்டராக இருக்கும் விவேக் அக்னிஹோத்ரி இக்கதையை இயக்கியுள்ளார். அவர் உங்களை ஒரே நேரத்தில் உற்சாகப்படுத்தவும், கைதட்டவும், அழவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குபவர்" என குறிப்பிட்டு படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளை பாராட்டினார். மேலும், "படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பாருங்கள். லாக்டவுன் காலகட்டத்தில் நாம் உயிர்வாழ உதவிய பெண்களுக்காக டிக்கெட்டை வாங்குங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)