தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்க கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீஸர் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்திற்கான டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முடித்திருந்தனர். இதனிடையே இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்தின் முதல் பாடல் ‘ஹே மின்னலே...’ வருகிற 30ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் சாய்பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில், கடந்த 2015ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடந்த இராணுவ அணிவகுப்பில் மறைந்த இராணுவ வீரர்களுக்கான அசோக் சக்ரா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸை காண்பிக்கின்றனர். பின்பு இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்திருப்பதாக அறிமுகப்படுத்துகின்றனர். அதன் பிறகு அமரன் படத்தின் சில காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.