
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு மக்களுக்கு வீடியோ மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நடிகை அமலாபால் திருமணம், மகப்பேறு குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
''காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களைப் பற்றியே கேட்கப்படுகின்றன. ஆண்களைப் பார்த்து, இந்தக் கேள்விகளை யாரும் கேட்பது இல்லை. பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும் இருக்கிறாள். பொருளாதாரத்திலும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறாள். அவளைக் குழந்தை பெற்றுக் கொடுப்பவளாகவும் பார்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகவே பெண் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளரும் குழந்தை, அவளைச் சாப்பிடக் கூட அனுமதிப்பது இல்லை. எப்போதும் வாந்தி எடுப்பது போலவே உணர்கிறாள். வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதைப் பெற்று எடுப்பது என்பது மரணம் போன்றே இருக்கும்.
அவள் ஒருமுறை கர்ப்பமாகி அதில் இருந்து மீள முடியாது. மீண்டும் அவளைக் கர்ப்பமாக்க அவளது கணவன் தயாராக இருக்கிறான். மக்கள் கூட்டத்தைப் பெருக்கும் தொழிற்சாலை போன்றே பெண் இருக்கிறாள். பெண்ணின் வலியில் ஆண் பங்கெடுப்பது இல்லை. ஆண்களைப் பொருத்தவரை பெண்களைப் பாலுணர்வைப் பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலியானது. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே அவன் நடத்துகிறான்'' எனப் பதிவிட்டுள்ளார்.