Skip to main content

சர்ச்சைக்குள்ளான அமலாபால் புகைப்படங்களை வெளியிட தடை...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

simbu

 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அமலாபால். விஜய்யுடன் 'தலைவா', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்'  என முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார். 'ஆடை' படத்தில் உடையின்றி நடித்து பரபரப்பைக் கிளப்பினார். 

 

நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர்களின் திருமண உறவு நீண்டநாள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு அமலா பால் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், தனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி சிலபடங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் பேசப்பட்டது. ஆனால், இதனை மறுத்த அமலா பால், தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்றார். அதைத்தொடர்ந்து, அந்தப் படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது சமூகவலைதள பக்கத்திலிருந்து நீக்கினார்.

 

இதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில், அமலாபால், பவ்னிந்தர் சிங் தன்னோடு எடுத்த புகைப்படங்களை வெளியிடத் தடைகோரியும், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கும், அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி பவ்னிந்தர் சிங், அவரோடு தொழில் ரீதியாக எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், என்னைப் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்குவதாகவும் உள்ளது. எனவே அந்தப் புகைப்படங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பவ்னிந்தர் சிங் மீது வழக்குத் தொடர அமலா பாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அமலா பால், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

 

ஒரு வருடமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம், நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்