
நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் வெளியானது. இப்போது தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன், சினிமா சார்ந்து பல விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். முன்னதாக சினிமாவுக்கென்று ஒரு துறையை உருவாக்கி அதில் கமல்ஹாசனை அமைச்சராக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். மேலும் 8 வருடம் ஆகியும் அஜித்தை சந்திக்க முடியாமல் போனதாக தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அவரது கோல்ட் படத்திற்கு தொடர் எதிர்விமர்சனங்கள் வருவதாகக் கூறி தனது எதிர்ப்பை பகிர்ந்திருந்தார். கடந்த மாதம் ரஜினியை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோ மூலம் பேச வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் புதிதாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சினிமாவுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்காததால், ரிசர்வ் பேங்க் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் சினிமா பார்ப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்த சினிமாவையும் பார்க்க உங்களுக்கு உரிமையில்லை. ஒருபோதும் பசுவின் வாயை மூடி பால் எதிர்பார்க்க முடியாது. சினிமாவை கொன்று குவிக்கும் இந்த தீவிர பிரச்சனையை பிரதமர் நரேந்திர மோடி கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.