
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக பட்னாவில் நடைபெற்றது. அதன் பிறகு சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் புஷ்பா 2 படத் தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்று, ஆந்திர அரசு டிக்கெட் விலையை உயர்த்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை திரையிடப்படவுள்ள ப்ரீமியர் காட்சிக்கு ரூ.944க்கு ஜி.எஸ்.டி.-யுடன் டிக்கெட் விலை உயர்த்தியுள்ளது. அதே போல் படம் வெளியாகும் தேதியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியதுடன் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரின் சினிமா டிக்கெட் விலை ரூ.324 என்றும் மல்டிபிளக்ஸ் சினிமா டிக்கெட் விலை ரூ.413 என்றும் ஜி.எஸ்.டி.-யுடன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்திய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அல்லு அர்ஜூன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் வலைதளப்பதிவில், “டிக்கெட் உயர்வுக்கு ஒப்புதல் அளித்த ஆந்திர அரசுக்கு நன்றி. முதல்வரின் இந்த முடிவு தெலுங்கு திரையுலகின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பை காட்டுகிறது. உங்கள் தொலைநோக்கு திரையுலகிற்கு அசைக்க முடியாத ஊக்கத்தை அளிக்கும் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.