allu arjun speech after get released from jail regards women passed away in pushpa 2 premiere case

‘புஷ்பா 2 - தி ரூல்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு எந்த முன் அறிவிப்புமின்றி அல்லு அர்ஜூன் சென்றார். திடீரென அவரை பார்த்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி ஓடினார். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (வயது 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த சம்பவ எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்புக் காட்சிக்கு தடை விதித்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். மேலும் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், மேலாளர், பால்கனி மேற்பார்வையாளர் என மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே அல்லு அர்ஜூன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தான் அல்லு அர்ஜூன் நேற்று (13.12.2024) கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல் நிலையத்தின் விசாரணைக்குப் பிறகு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 14 நாட்கள் அவர் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து நேற்று அவர் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர் நானி, நடிகை ராஷ்மிகா மற்றும் இந்தி நடிகர் வருண் தவான் உள்ளிட்ட சிலர் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இது ஒருபுறம் இருக்க அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையப் பத்திரத்தின் அடிப்படையில் அல்லு அர்ஜுனுக்குத் தெலுங்கானா உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் இன்று (14.12.2024) காலை விடுவிக்கப்பட்டார். அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Advertisment

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அல்லு அர்ஜூன், “நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன். மறுபடியும் இறந்த அந்த பெண்ணின் குடும்பத்திற்கு எனக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக நான் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருகிறேன். இது போல் எந்த ஒரு படத்துக்கும் நடந்ததில்லை. இழப்பை ஈடுகட்ட முடியாது. இருந்தாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நான் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்வேன்” என்றார்.