/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_47.jpg)
புஷ்பா 2 - தி ரூல்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி ( 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். மேலும் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளி வந்தார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் மகன் குறித்து மிகுந்த கவலையடைவதாகவும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுவன், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தார். கடந்த 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த சிறுவன் தற்போது சிகிச்சை பலனின்றி மூளைச்சாவடைந்திருக்கிறார். ஏற்கனவே தாய் இறந்திருக்கும் நிலையில் மகனும் மூளைச்சாவடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)