இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதனை எதிர்த்து பழங்குடியினப் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையேகடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதே போல் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரிதேஷ், "பெண்ணின் கண்ணியம் மீதான தாக்குதல் மனித இனத்தின் மீதான தாக்குதல், "பெண்ணின் கண்ணியம் மீதான தாக்குதல் மனித இனத்தின் மீதான தாக்குதல்" என குறிப்பிட்டு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.