akash baskaran ed case update

டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

Advertisment

இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வீடு அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது? எதன் அடிப்படையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது? என பல்வேறு கேள்விகள் எதிர்தரப்பினருக்கு நீதிமன்றம் கேட்டது. மேலும் சோதனை மேற்கொண்ட போது என்ன என்ன ஆவணங்களை கைப்பற்றப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.

Advertisment

அதன்படி இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தார்’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடமும் எதனடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை என கூறி ஆவணங்களை நாளை(18.06.2025) தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து வீட்டை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத பொழுது எப்படி சீல் வைக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்பு அந்த நோட்டிஸை அகற்றிவிடுவதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த விவாகரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்புள்ள ஆவணங்களை நாளை(18.06.2025) தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்குநீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisment